தென்காசியில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் அவதி
தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கோடை காலம் தொடங்கும் முன்பு தென்காசி மாவட்டத்தில வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதற்கிடையில் கோடை காலத்தில் உச்சக்கட்ட வெயில் நிலவும் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகும் முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ? என்ற ஒருவித கலக்கத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
இந்த நிலையில் அக்னிநட்சத்திரம் ஆரமிக்கும் முன்னதாகவே வெயில் தனது உக்கிரத்தை காட்டுகிறது.கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக சுட்டெரிக்கிறது. தென்காசி மாவட்டத்தில் பகலில் வெயில் கொளுத்தியது.குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சாலையில் நடந்து சென்றவர்கள் பலர் குடையை பிடித்தபடி நடந்து சென்றதை காணமுடிந்தது.
அதேநேரத்தில் சில ஆண்கள் தலையில் துண்டை போர்த்தியபடியும், பெண்கள் சேலை முந்தானையாலும்,துண்டாலும் தலையை மூடியபடி சென்றதை காணமுடிந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். தர்பூசணி பழம் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பலர் தர்பூசணி பழம், முலாம் பழம் வாங்கி சாப்பிட்டனர். இதேபோல குளிர்ச்சி தரக்கூடிய, தாகத்தை தணிக்க கூடிய இளநீர், பழச்சாறு வகைகள்,கரும்பு சாறு உள்ளிட்ட ஜூஸ் வகைகளையும் அருந்தினர்.
வெயிலின் தாக்கத்தால் தற்போது இவற்றின் விற்பனையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சாலையோரங்களில் உள்ள இளநீர் கடைகள்,தர்பூசணி பழம், ஜூஸ் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. வெயிலின் கொடுமையை எப்படி தான் சமாளிக்க போகிறோமோ? என பொதுமக்கள் எண்ணி வருகின்றனர்.