“ராக்கிங்” புகார்: சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் தேர்வு எழுத தடை

திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சக மாணவனை குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து ஏமாற்றி குடிக்க வைத்த இரு மாணவர்கள் பருவத்தேர்வு எழுத ராக்கிங் தடுப்புக்குழுவினர் தடை விதித்துள்ளனர்.

Update: 2024-01-25 01:26 GMT

 தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் 

திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், நவலூர்குட்டப்பட்டு பகுதியில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி நடந்த மாணவர்கள் சந்திப்பு கூட்டம் ஒன்றில் பி.ஏ.எல்.எல்.பி., இறுதியாண்டு படிக்கும் 2 மாணவர்கள், தங்களுடன் படிக்கும் சக மாணவர் ஒருவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து ஏமாற்றி குடிக்க வைத்துள்ளனர். இதுகுறித்து அந்த மாணவன், சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் வி.நாகராஜ், பதிவாளர் எஸ்.எம். பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில், விசாரணை நடத்தப்பட்டு ராக்கிங் செய்த இரு மாணவர்களும் இடைநீக்கம் செய்யப் பட்டனர். மேலும், இதுதொடர்பாக பேராசிரியர்கள் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணைக் குழுவின் அடிப்படையில், பதிவாளர் பாலகிருஷ்ணன் ராம்ஜிநகர் போலீஸில், தொடர்புடைய இரு மாணவர்கள் மீது புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், துணைவேந்தர் தலைமையிலான 9 பேர் கொண்ட ராக்கிங் தடுப்புக்குழுவினர் பங்கேற்ற கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இதில், “ராகிங்கில்’ ஈடுபட்ட இரு மாணவர்களும் நடப்பு கல்வியாண்டில் (2023-24) 10 ஆவது பருவத்தேர்வுக்கு படிக்கவும், தேர்வெழுதவும் தடை விதிக்கவும், மேலும் 10 ஆவது பருவ படிப்பை அடுத்த கல்வியாண்டில் (2024-25) படிக்கலாம் எனவும் பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பரிந்துரையை பல்கலைக்கழக நிர்வாகக்குழு அடுத்த வாரம் இறுதி செய்யும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. ராக்கிங் புகார் குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், இந்த நடவடிக்கையை ராக்கிங் தடுப்புக்குழு மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News