ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் புகார் கூற அழைப்பு
தஞ்சாவூர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோர் புகார் கூறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் லில்லி கிரேசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சை ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், இந்த நிறுவனத்தை நடத்தி வந்த கமாலுதீன் தங்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு லாபத்தில் பங்குத் தொகை கொடுப்பதாக கூறி ஏமாற்றிவிட்டதாக கொடுத்த புகாரின்பேரில் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.
உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதியின் உத்தரவுப்படி, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இதுவரை புகார் அளிக்காமல் இருந்தால் தக்க ஆவணங்களுடன் ராஹத் டிரான்ஸ்போர்ட் மற்றும் ராஹத் கேப்ஸ் நிறுவனங்களின் மீது திருச்சி மன்னார்புரம் பல்துறை கட்டட முதல்தளத்தில் உள்ள மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவில் நேரில் ஆஜராகி புலன் விசாரணை அதிகாரியிடம் புகார் அளிக்கலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.