பேராவூரணியில் ரயில்வே துறை விழிப்புணர்வு
பேராவூரணியில் ரயில்வே துறை சார்பில் ரயில்வே கேட்டை கடந்து செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதி முறைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோயில் ரயில்வே கேட் அருகில், ரயில்வே லெவல் கிராசிங் கேட்டை கடக்கும் போது, வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ரயில் நிலைய மேற்பார்வையாளர் தரம்சிங் மீனா தலைமை வகித்தார். நிலைய அதிகாரி பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். மூடப்பட்டிருந்த ரயில்வே கேட் முன்பாக காத்திருந்த, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
ரயில்வே கேட் மூடி இருக்கும் பொழுது பாதசாரிகள் கடந்து செல்லாமல், ரயில் சென்ற பின் கேட்டை திறந்த பிறகே கடந்து செல்ல வேண்டும் . ரயில்வே கேட் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ளது எனவே மூடி இருக்கும் கேட்டை திறக்கவோ, சேதப்படுத்தவோ கூடாது.. ரயில்வே விதி 146/1989 இன்படி மூடி இருக்கும் கேட்டினை திறக்க முயற்சிப்பது அல்லது சேதப்படுத்துவது மற்றும் பணியில் உள்ள கேட் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதுபோன்ற குற்றங்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை ரூ.10 ஆயிரம் அபராதம் இரண்டும் விதிக்கப்படும். பொதுமக்களின் உயிர் விலை மதிப்பற்றது. எனவே ரயில்வே விதியினை பின்பற்றி பாதுகாப்பாக ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தனிப்பயிற்சி கல்லூரி முதல்வர் கெளதமன், ரயில்வே கேட் ஊழியர்கள் ஆரோக்கிய செல்லமுத்து, நிரஞ்சன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .