காங்கேயத்தில் மழை பொழிவால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்
கோடைகால மழை பொழிவால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்.
Update: 2024-05-18 07:01 GMT
தற்போது கோடைகால பருவநிலை மாற்றத்தால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை மற்றும் பரவலான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 1 மணி அளவில் துவங்கிய மிதமான மழை இரவு 8 வரையிலும் பரவலாக பெய்தது. மதியம் பெய்த தொடர் மழையால் காங்கேயம் திருப்பூர் சாலையில் வாய்க்கால் மேடு பகுதியில் இருந்து காங்கேயம் பேருந்து நிலையம் வரையிலும் மழை நீரானது பெருக்கெடுத்து வெள்ளமாக ஓடியது. மேலும் அப்பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள கால்வாயில் கழிவுநீருடன் மழை நீரும் கலந்து சாலையில் ஓடியது. மேலும் இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதித்தது. காலை முதல் வானிலை மந்த நிலையில் இருந்து வந்த எதிர்பாராத இந்த 5 மணி நேரத்திற்கு மேலான இந்த தொடர் மழையால் வணிக வளாகங்கள், உணவகங்கள், சாலையோர கடை வியாபாரம், அலுவலகங்கள் என அனைத்து தொழிலும் பாதிப்படைந்தது. இதனால் வெகு நேரம் பொதுமக்கள் பாதுக்காப்பான இடங்களில் நின்று மழையின் அளவு குறைந்த பிறகே பயணத்தை துவங்கினர்.