சூறைக் காற்றுடன் மழை : ரயில் நிலையத்தில் பெயர்ந்து விழுந்த தகரக் கூரை
தஞ்சாவூரில் நேற்று முன்தினம் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடை தகரக் கூரை பெயர்ந்து விழுந்தது.
தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை ஏறத்தாழ ஒரு மணிநேரம் சூறைக்காற்று, பலத்த இடி சப்தம், மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடையில் மேற்கூரையில் வேயப்பட்டிருந்த தகரக் கூரை ஏறத்தாழ 100 அடி அளவில் பெயர்ந்து தண்டவாளத்தில் விழுந்தது. இந்த நடைமேடையில் ஏற்கெனவே சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு ஆள்கள் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
ஆனால், இந்தத் தகரக் கூரை முதலாவது நடைமேடைக்கான தண்டவாளம் வரை பரவி விழுந்து கிடந்தது. இதனால், முதலாவது நடைமேடையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக திருச்சி வழித்தடத்திலிருந்து வந்த ரயில்கள் நான்காவது நடைமேடைக்கும், கும்பகோணம் வழித்தட ரயில்கள் மூன்றாவது நடைமேடைக்கும் திருப்பி விடப்பட்டன. இதனால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர். இதனிடையே, ரயில்வே பணியாளர்கள் சுமார் 2.30 மணிநேரம் முயற்சி செய்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த தகரக் கூரையை அகற்றியதையடுத்து, ரயில் போக்குவரத்து சீரானது. மேலும், அறுந்து விழுந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச.முரசொலி நிகழ்விடத்துக்குச் சென்று பார்வையிட்டு, ரயில்வே அலுவலர்களிடம் நிலைமையைக் கேட்டறிந்தார்.