இரணியல் பகுதியில் மழை - சேறும் சகதியுமான சாலை
இரணியல் ரயில்வே மேம்பால சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காற்றாடி முக்கு சந்திப்பிலிருந்து இரணியல் வள்ளியற்று ரயில்வே மேம்பாலம் வழியாக செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக மேல்பாறை , சடையமங்கலம், சித்தன்தோப்பு, தாந்த விளை, ஆழ்வார் கோவில் உள்ளிட்ட பல கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும் டெம்போ பைக் உள்ளிட்ட வாகனங்களும் அதிக அளவில் வந்து செல்கின்றன.
இந்த சாலையில் சமீபகாலமாக செம்மண் குவியலாக குவிந்து கிடக்கின்றது. தண்டவாள விரிவாக்க பணிக்காக போடப்பட்ட இந்த செம்மண் மழையில் அரித்துவரப்பட்டு ரோட்டை மறைத்து குவிந்து கிடக்கிறது. இதனால் தற்போதைய மழையில் சேறும் சகதியுமாக, மழை நீர் தேங்கி கிடக்கும் சாலையில் கடும் சிரமத்திற்கு இடையில் மக்கள் வந்து செல்கின்றனர். இந்த செம்மண் குவியல்களை அகற்ற ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் வந்து செல்ல சிரமப்படுகின்ற சாலையில் சேதும் சகதியமாக கிடக்கும் செம்மண் குவியல்களை அகற்ற ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.