ராமநாதபுரம் :லோக் அதாலத்தில் 1657 வழக்குகள் விசாரணை
ராமநாதபுரம் மாவட்டத்தில் லோக் அதாலத் 9 நீதிமன்றங்களில் நடைபெற்றது. 1657 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சமரசம் பேசி முடிப்பதற்காக லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 9 நீதிமன்றங்களில் 1657 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, இராமநாதபுரம் ஆகிய நீதிமன்றங்களில் இன்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர்கள் இரு தரப்பிலும் சமரசம் பேசி ஏராளமான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வரும்பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருந்த ஒரு தம்பதியினரை இரு தரப்பிலும் சமரசமாக பேசி மீண்டும் சேர்ந்து வாழ வைக்கப்பட்டனர். அது மட்டுமின்றி பரமக்குடியில் 2013ஆம் ஆண்டில் டூவிலர் மீது கார் மோதிய வழக்கில் இரு கால்களும் பாதிக்கப்பட்ட பரமக்குடியை சேர்ந்த குமரகுருநாதன் என்பவர் தனக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை இருதரப்பிலும் பேசி சமரசம் செய்து ரூ 16.5 லட்சம் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க ஒத்துக் கொண்டதை அடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டு ரூ 16.5 லட்சத்திற்கான காசோலையை பாதிக்கப்பட்டவருக்கு நீதிபதி குமரகுரு வழங்கினார்.