ராமநாதபுரம்: கடல் போல் காட்சி அளிக்கும் உப்பளங்கள்..!
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக உப்பளங்கள் அனைத்தும் நீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, ஆணைகுடி வாலிநோக்கம், கோப்பேரிமடம், உப்பூர் திருப்பாலைக்குடி சம்பை பத்தனேந்தல் உள்ளிட்ட பல ஊர்களிலும் ஏராளமான உப்பள பாத்திகள் அமைந்துள்ளன. இந்த உப்பள பாத்திகளில் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில் இருந்து உப்பு உற்பத்தி சீசன் தொடங்கி நடைபெறும். மழை கால சீசன் தொடங்குவதற்கு முன்பாக செப்டம்பர் மாதத்துடன் உப்பு உற்பத்தி சீசன் முடிவடைந்து விடும்.
அதன்படி, இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி, மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது.இதனால் திருப்புல்லாணி, ஆணைகுடி வாலிநோக்கம் கோப்பேரிமடம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள உப்பள பாத்திகள் முழுவதும் மழை நீரில் மூழ்கி கடல் போல் காட்சியளிக்கின்றன .
ஏற்கனவே பாத்திகளில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட கல் உப்புகள் மழையில் நனைந்து விடாமல் இருக்க பெரிய தார் பாய் கொண்டும் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளன.மழை சீசனை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏராளமான உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இன்றியும் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.