மதுரையில் ரம்ஜான் கொண்டாட்டம்
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் சிறப்புத் தொழுகை நடந்தது.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாத நோன்பாகும். அதனடிப்படையில் ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பினை கடைபிடிப்பார்கள். ரமலான் மாதம் முதல்நாள் தொடங்கி தொடர்ச்சியாக 30நாட்களும் நோன்பினை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் மற்றொரு கடமையான ஏழை எளியோருக்கு ஜகாத் என்னும் உதவிகளை வழங்கிவருவார்கள்.
ரமலான் 30நோன்பு முடிவடைந்த பின்னர் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான் பண்டிகையாக கொண்டாடுவர். இதற்காக அதிகாலையில் தொழுகை முடித்த பின்னர் புத்தாடை அணிந்து ஈதுல் பித்ர் என்னும் பெருநாள் சிறப்பு தொழுகையில் கலந்துகொள்வர். பெருநாள் சிறப்பு தொழுகையை திறந்தவெளி திடல்களில் தொழுவது கூடுதல் சிறப்பு என்பதால் பல்வேறு பகுதிகளில் திடல்களிலும், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெறும். தொழுகைக்கு செல்வதற்கு முன்பாக ஏதாவது ஒரு ஏழைக்கு உதவி செய்ய்வேண்டும் அடிப்படையில் பத்து என்னும் உதவியை வழங்கிவிட்டு தொழுகையில் ஈடுபடுவர்.
அதனடிப்படையில் மதுரை மாவட்டம் எல்லிஸ்நகர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகையில் நடைபெற்றது. திடல் பகுதியில் நடைபெற்ற இந்த சிறப்பு தொழுகையில் பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல் தமுக்கம், மீனாம்பாள்புரம், திருமங்கலம், மேலூர் , வில்லாபுரம், தெற்குவாசல், ஆகிய பகுதிகளில் உள்ள திடல்களில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மற்றும் JAQH ( ஜாக் ) அமைப்பினர் சார்பில் ஏராளமான இஸ்லாமியர்கள் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோன்று புறநகர் பகுதிகளிலும் ஏராளமான இஸ்லாமியர்கள் பெருநாள் திடல் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
பெருநாள் சிறப்பு தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் ஒருவொருக்கொருவர் கைகொடுத்தும், ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர். சிறப்பு தொழுகையின் முடிவில் சமத்துவம் நிலவ வேண்டியும், உலக அமைதிபெற வேண்டியும், மழை பொழிய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு துஆ செய்தனர். தமிழகத்தில் நேற்றிரவு பிறை தென்படாத நிலையில் 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு் தலைமை ஹாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் தவ்ஹீத்ஜமாத் மற்றும் JAQH அமைப்பின் சார்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.