குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகர்மன்றத் தலைவர் அறிவுறுத்தல்

கோடை காலம் துவங்கியுள்ளதால் ராசிபுரம் நகராட்சி பகுதி பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும் என நகர்மன்றத் தலைவர் கவிதா சங்கர் கேட்டுக்கொண்டார்.

Update: 2024-03-15 08:14 GMT

கவிதா சங்கர் 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும் என நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 2021-ம் ஆண்டுக்கு முன் ராசிபுரம் நகராட்சியில் 22 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. திமுக அரசு பொறுப்பேற்றவுடன், நீருந்து இயந்திரம் மூலம் ஆற்று நீர் கொண்டுவரப்பட்டு 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி குடிநீர் விநியோகம் மட்டுமின்றி நகரின் 27 வார்டுகளுக்கும் கவனம் செலுத்தி ஆழ்துளைக் கிணறு மற்றும் போர் வெல் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் ஒருங்கிணைந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் ராசிபுரம் பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் தடைபட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இனி வரும் நாட்களில் இப்பிரச்சனை சரி செய்யப்பட்டு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். பொதுமக்கள் எவரும் கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று எண்ண வேண்டியதில்லை. நகராட்சி நிர்வாகம் அதற்கு பொறுப்பேற்று தண்ணீர் பிரச்சனையை தீர்க்க பொறுப்பேற்கும்.

குடிநீரினை பொது மக்கள் சிக்கனமாக பயன்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. புதிய கூட்டு குடிநீர் திட்டப் பணிக்கு 04.09.22 அன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் தலைமையில், வனத்துறை அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் முன்னிலையில்ல தொடங்கப்பட்டு விரைந்து பணிகள் நடந்து வருகிறது. 2024-ஆம் ஆண்டு இறுதிக்குள் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பட்டிற்கு வரும். இதன் மூலம் குடிநீர் தட்டுபாடு இல்லை என்ற நிலை உருவாகும் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News