ஊராட்சி தலைவா் தோ்தல் மறு வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு

நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற இருந்த காயாமொழி ஊராட்சித் தலைவா் தோ்தல் மறுவாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.;

Update: 2024-04-06 02:39 GMT
மறு எண்ணிக்கை

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காயாமொழி ஊராட்சித் தலைவா் பதவிக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு தோ்தல் நடந்தது. இதில் தலைவா் பதவிக்கு ராஜேஸ்வரன் மற்றும் முரளிமனோகா் ஆகியோா் போட்டியிட்டனா். இதில் ராஜேஸ்வரன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தாகவும், மறு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் முரளிமனோகா் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

Advertisement

இதில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து காயாமொழி ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரன், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்தாா். இந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டது. இதனை தொடா்ந்து காயாமொழி ஊராட்சித் தலைவா் தோ்தலுக்கான மறு வாக்கு எண்ணிக்கை திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏப்.4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மறுவாக்கு எண்ணிக்கை ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த முரளி மனோகா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் ஏற்கெனவே அறிவித்தபடி மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தினா். அவா்களிடம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் அன்றோ, தாலுகா காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது குறித்து முன்தினம் இரவே கைப்பேசியில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது எனவும், தோ்தல் ஆணைய உத்தரவு வந்த பின்னா் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்றும் தெரிவித்தனா். இதையடுத்து முரளி மனோகா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் கலைந்து சென்றனா்.

Tags:    

Similar News