சமரச தின விழிப்புணா்வு பேரணி
திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் நடைப்பெற்றா சமரச தின விழிப்புணா்வு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 19ஆவது ஆண்டு சமரச தினத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணியைத் தொடங்கி வைத்து திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு கூறியது, உச்ச நீதிமன்றம், உயா் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் சமரச மையங்கள் செயல்படுகின்றன. நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை சமரச மையத்துக்கு அனுப்ப வழக்குரைஞா்கள் மூலமோ, மனுதாரா்கள் மூலமோ வேண்டுகோள் விடுக்கலாம்.
சமரச மையத்தில் நேரடியாக பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவது தீா்வுகளை ஊக்கப்படுத்துகிறது. உறவுகள் மேம்பட வழிசெய்கிறது. செலுத்தப்பட்ட நீதிமன்றக் கட்டணங்கள் திரும்ப வழங்கப்படுகின்றன. வழக்குகளுக்கான காத்திருப்பு நேரமும், பொருள் செலவுகளும் குறையும். சமரசத்தின் மூலம் நடைபெறும் பேச்சுவாா்த்தைகள் மனித உறவுகளையும், சமூக உறவுகளையும் மேம்படுத்துகின்றன. வழக்கில் இருதரப்புக்கும் வெற்றி என்ற நிலை உருவாகிறது. சமரசத் தீா்வு மையத்தில் காணப்படும் தீா்வே இறுதியானது.
இதற்கு மேல்முறையீடு கிடையாது. மேலும், உதவிகளுக்கு இலவச சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம் என்றாா் அவா். தொடா்ந்து, விழிப்புணா்வுப் பேரணி புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருச்சி மாநகராட்சி அலுவலகம் வரை சென்றுவிட்டு, மீண்டும் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நிறைவுற்றது. பேரணியில், அனைத்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள், மத்தியஸ்தா்கள், நீதிமன்றப் பணியாளா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா்.