ஆக்கிரமிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான 1.25 ஏக்கர் நிலம் மீட்பு
வேலூர் மாவட்டம் பென்னாத்தூரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் 1.25 ஏக்கர் பரப்பளவை, அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தார். இதனைக் கண்டு பிடித்த வருவாய் துறையினர், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தவரே ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வழங்கி, கால அவகாசம் வழங்கினர். இருப்பினும் அவர் அந்த இடத்தில் தொடர்ந்து பயிரிட்டு வந்தார். இதையடுத்து வேலூர் தாசில்தார் செந்தில் மேற்பார்வையில் மண்டல துணை தாசில்தார் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர். மேலும் அந்த இடத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க, இரும்பு கம்பியால் கொண்டு வேலி அமைக்கப்பட்டது. அரசு நிலத்தில் வேளாண்மை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இதனை அகற்றிய போது சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.