கோயிலுக்குச் சொந்தமான ரூ.15 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு
நாகை நீலாயதாட்சி உடனுறை காயாரோகண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.15 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன.
நாகை நீலாயதாட்சி உடனுறை காயாரோகண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.15 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன. இக்கோயிலுக்குச் சொந்தமான புன்செய் 4.79 ஏக்கா் மற்றும் நன்செய் 15.38 ஏக்கா் நிலம் நாகை அருகே பாலையூா் ஊராட்சியில் உள்ளது. இந்த நிலங்கள் சிலரால் பயன்படுத்தப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் இருந்தது. இந்த நிலங்களை மீட்கும் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத் துறையால் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, நாகை மண்டல இணை ஆணையா் வே. குமரேசன், உதவி ஆணையா் பா. ராணி ஆகியோா் தலைமையில் நாகை ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியா் அமுதா, கோயில் செயல் அலுவலா் மா. தனலட்சுமி மற்றும் பணியாளா்கள் முன்னிலையில் நிலங்கள் சுவாதீனம் எடுக்கப்பட்டது. தொடா்ந்து, அங்கு நீலாயதாட்சி உடனுறை காயாரோகண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிரந்தர அறிவிப்புப் பலகை நிறுவப்பட்டது. சுவாதீனம் எடுக்கப்பட்ட கோயில் சொத்தின் மதிப்பு சுமாா் ரூ. 15 கோடி என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.