அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்
நாமக்கல் மாவட்டம்,திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் நடைபெற்ற புத்தாக்க பயிற்சியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இரண்டு நாட்கள் புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமினை விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு.கருணாநிதி துவக்கி வைத்தார். விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபி ஷகிலா வரவேற்புரை வழங்கினார்.
இம்முகாமிற்கு சிறப்பு விருந்தினர்களாக பள்ளிக் கல்வித் துறை சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜூ, EDII மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவு சார் முன்மாதிரி கண்டுபிடிப்புகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் கூடுதல் தலைமை செயலர் /இயக்குனர் உமாசங்கர் காணொளி மூலம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடம் சிறப்புரையாற்றினார். மாணவ, மாணவிகள் தாங்கள் கண்டுபிடித்த முன்மாதிரி கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்,
இந்த புத்தாக்க பயிற்சி முகாமானது தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் முழுவதிலுமிருந்து மாணவ, மாணவிகளின் கண்டுபிடிப்புகளை பள்ளிக்கல்வி துறை சார்ந்த உறுப்பினர்கள் மதிப்பீட்டாளர்கள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு மாநில அளவில் 40 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் வெற்றி பெற்ற முதல் 10 அணிகளுக்கு தலா 1 லட்சம் மேலும், இரண்டாம் நிலையில் உள்ள 30 அணிகளுக்கு தலா ருபாய். 25,000/- ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளனர்.
மேலும் இந்த புத்தாக்க பயிற்சி முகாமில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், காக்கபாளையம், பரமத்தி, மல்லசமுத்திரம், புதுச்சத்திரம், முள்ளுக்குறிச்சி, பல்லகாபாளையம், ஜேடர்பாளையம், குமாரபாளையம், நாமகிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த பயிற்சி முகாமிற்க்கான ஏற்பாடுகளை விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய பேராசிரியர் டாக்டர் சசிக்குமார் ஒருங்கிணைத்து நடத்தினார்.