சீரான குடிநீர் விநியோகம் - அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் தட்டுப்பாட்டிலாமல் சீரான குடிநீர் விநியோகம் செய்வது குறித்து அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆலோசனை மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் சீராக வழங்குவது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடான கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்தாய்வு மேற்கொண்டு அவர் தெரிவிக்கையில்- கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சீராக குடிநீர் வழங்கப்படுவதை துறை சாரந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிப்படுத்திட வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். பொது சுகாதார துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் அனைவரும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார். இக்கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., செயற்பொறியாளர் (கூட்டுகுடிநீர்), உதவி திட்ட அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.