உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
சிவகங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-02-05 05:21 GMT
சிவகங்கை அருகே கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அழகர் - முத்துலெட்சுமி தம்பதியின் மூத்த மகன் அருண்ராஜ். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் இடையே ஏற்கனவே கோவிலில் வழிபாடு தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அன்று மாலை மணிகண்டன் அவரது உறவினர்களுடன், கிராமத்தில் உள்ள கோவில் வாசலில் பேசிக்கொண்டிருக்கும்போது அதே நேரம் வேலை முடித்து வீடு திரும்பிய அருண்ராஜுக்கும் மணிகண்டனுக்குமிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் மணிகண்டனை, அருண்ராஜ் தாக்கியதாக கூறி மதகுபட்டி காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருண்ராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை தொடர்ந்து பிணையில் அருண்ராஜ் வீடு திரும்பிய நிலையில் மணிகண்டன், அருண்ராஜை அழைத்து கொலை மிரட்டல்விடுத்ததாக கூறப்படும் நிலையில் அருண்ராஜ் அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மதகுபட்டி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் அவரது உறவினர்கள் இறப்பிற்கு காரணமான மணிகண்டனை கைது செய்யக்கோரி சிவகங்கையிலிருந்து மானாமதுரை செல்லும் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்குவந்த காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்தனர். இதன் காரணமாக சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.