உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஜி.அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன் மகன் ஆனந்தன், 31; அம்மன் கொள்ளை மேடு பஸ் ஸ்டாப் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடை திறக்காததால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், கடையை திறந்து பார்த்தபோது, ஆனந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
டீ கடைக்கு பால் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையால் ஆத்திரம் அடைந்த சிலர் ஆனந்தனை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளியதாக கூறி அவரது உடலை சாலையில் வைத்து உறவினர்கள் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டனர். புகார் அளித்தால் வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.
இது குறித்து ஆனந்தனின் உறவினர்கள் திருக்கோவிலூர் போலீசில் புகார் அளித்தனர். தற்கொலைக்கு தூண்டியவர்கள் கைது செய்யப்பட்டால் மட்டுமே உடலை வாங்குவோம் என நேற்று உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கிராம மக்களுடன் நேற்று காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த நிலையில், உறவினர்கள் ஆனந்தனின் உடல் பிரேத பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டு, உடலை பெற்றுக் கொண்டனர்.