அரசு பொது மருத்துவமனையில் கூடுதல் பணியாளரை நியமிக்க கோரிக்கை

மதுராந்தகத்தில் அரசு பொது மருத்துவமனையில் கூடுதல் பணியாளரை நியமிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-04-28 13:17 GMT

அரசு மருத்துவமனை

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை சித்தாமூர், சூணாம்பேடு, அச்சிறுபாக்கம், மதுராந்தகம், ராமாபுரம், வேடந்தாங்கல் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில், நாள்தோறும் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் என, 1,200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் உள் மற்றும் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 110 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், உள்நோயாளிகள் பிரிவில் பெண்களுக்கு 24 படுக்கைகளும்,

ஆண் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 32 படுக்கைகளும் உள்ளன. மாதந்தோறும் 40 முதல் 50 பிரசவங்கள் நடைபெறுகின்றன. உள்நோயாளிகள் மற்றும் பிரசவ வார்டில் உள்ளவர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் உணவு தயார் செய்து வழங்கப்படுகிறது.

உணவு தயார் செய்யும் சமையல் பணிக்கு, ஒரு பெண் சமையலர் மட்டுமே உள்ளார். எனவே, பாத்திரம் கழுவுதல், காய்கறி வெட்டுதல், சமைத்தல் மற்றும் சமைத்த உணவுகளை மருத்துவமனை வார்டு பகுதியில் பரிமாறுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை, அவரே செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால், காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, சமையல் பணியாளரின் சுமையை குறைக்கும் வகையில், கூடுதலாக உதவி சமையல் பணியாளர் ஒருவரை நியமித்து தர, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News