மின் வாரிய கேங்மேன்களுக்கு பணியிட மாறுதல் வழங்க கோரிக்கை
மின்வாரிய ஊழியர்கள் பணியிட மாறுதல் கேட்டு மனு அளித்தனர்.
மின் வாரியத்தில் பணியாற்றும் கேங்மேன்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற் சங்கத்தினர், அதன் மாநிலச் செயலாளர் பெ.பிரபாகரன் தலை மையில் மின் வாரிய தஞ்சாவூர் மண்டல தலைமைப் பொறியாளரிடம் அளித்த மனு: மின் வாரியத்தில் 2021-ம் ஆண்டு நேர்முகத் தேர்வு மூலம் 10,000 கேங்மேன்கள் நியமனம் நடைபெற்றது. இதில், 9,613 பேர் பணியேற்பு செய்து 2 ஆண்டுகள் பயிற்சியாளர்களாக பணியாற்றினர்.
பின்னர் பயிற்சி காலம் முடிந்து, 2023, மார்ச் மாதத்தில் இருந்து கேங்மேனாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் கேங்மேன்களுக்கென வரையறுக்கப்பட்ட பணி கள் மட்டுமின்றி, கள உதவியாளர், கம்பியாளர், கணக்கீட்டாளர், வணிக ஆய்வாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப் பட்ட பணிகளையும் சேர்த்து மேற்கொண்டு வருகின்றனர். மின் வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களில் களப்பணியில் மட்டும் 24,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, இந்த இடத்தில் 9,613 கேங்மேன்களை பணி அமர்த்த வேண்டும்.
மின்வாரியத்தில் கேங்மேன் களை தவிர மற்ற அலுவலர்கள், ஊழியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது. ஆனால், கேங் மேன்களுக்கு மட்டும் வழங்கப்படுவதில்லை. கேங்மேன்கள் ஓராண்டு பணி முடித்தால் உள்வட்டத்துக் குள்ளும், 2 ஆண்டு பணி முடித்தால் வெளி மாவட்டத்துக்கும் பணியிட மாறுதல் செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே உத்தரவு உள்ளது. எனவே, வெளி மாவட்டங்களில் பணியாற்றி வரும் கேங்மேன்கள், அவர்களது சொந்த ஊர்களில் பணியாற்றும் வகையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.