மாற்றுத்திறனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க கோரிக்கை
தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா, மாற்று திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வாகனம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 113 மனுக்களை மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தலா ரூ.1லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியை 7 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தனித்துறை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஷங்கர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சீனிவாசன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
கோரிக்கை இக்கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட தலைவர் கஸ்தூரி, துணைத் தலைவர் மேனகா, சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் எஸ்.ஜெ.ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களில் கோடைகாலங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பேட்டரி கார் மற்றும் வீல் சேர் வசதி ஏற்படுத்த வேண்டும். தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாகுபாடின்றி வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்ப அட்டை வழங்க வேண்டும். தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியத்தில் கள ஆய்வு செய்து வீடு வழங்க வேண்டும்.
அதேபோல் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதில் முறைகேடு இருப்பதால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கள ஆய்வு செய்து தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.