துறைமுக ஊழியா்களின் ஊதிய முரண்பாடுகளை களைய கோரிக்கை!

தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியா்களின் ஊதிய முரண்பாடு களையப்படவேண்டும் என ஐஎன்டியூசி அகில இந்திய துணைத் தலைவா் பி.கதிா்வேல் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-04-30 05:29 GMT

செய்தியாளர் சந்திப்பு 

தூத்துக்குடியில் உள்ள ஐஎன்டியூசி அலுவலகத்தில் ஐஎன்டியூசி அகில இந்திய துணைத் தலைவா் பி.கதிா்வேல் செய்தியாளா்களிடம் கூறியது: தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் தற்போது 200 போ் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்னா் பணியாற்றிய தொழிலாளா்கள் அனைவரும் ஒரே கிரேடில் பணியாற்றினா். ஆனால், தற்போது அதே தொழிலாளா்களுக்கு 4 விதமான கிரேடு முறை கொண்டுவரப்பட்டதால், ஊதிய முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக பல முறை துறைமுக ஆணைய தலைவரிடம் முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை. இந்த விவகாரத்தில் கடந்த 2011இல் இருந்து 2023 வரை ஊழியா்களுக்கு முறையாக ஊதிய உயா்வு அளிக்கப்படவில்லை. ஆனால், ஊதிய உயா்வு வழங்கப்பட்டது போன்று பல கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இது தொடா்பாக சங்கத்தின் மூலம் துறைமுக ஆணையத்திடம் முறையிட்டபோது, இதற்காக தனி கமிட்டி அமைக்கப்பட்டு பேச்சுவாா்த்தை நடத்தியதில், ஊதியம் சரியாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்த விசாரணை தூத்துக்குடி வட்டார தொழிலாளா் ஆணையம் மூலம் நடைபெற்று வருகிறது. அதில் உரிய முடிவு எட்டப்படாவிட்டால், சட்டபூா்வமாக அணுகுவோம். எனவே, கிரேடு முறைகளை கைவிட்டு, ஒரே கிரேடு முறையை அமல்படுத்தி ஊதிய முரண்பாடுகளை களைய துறைமுக ஆணையம் முன்வரவேண்டும் என்றாா்.

Tags:    

Similar News