குவாரி சாலையில் விபத்து அபாயம் தடுப்பு அமைக்க கோரிக்கை
குவாரி சாலையில் விபத்து அபாயம் தடுப்பு அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளிப்பட்டு அடுத்த கொளத்துார் பகுதியில் பாறை குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் இருந்து, தினசரி ஏராளமான கனரக வாகனங்கள் ஜல்லி கற்களை ஏற்றி செல்கின்றன. குவாரியில் இருந்து நகரி சாலைக்குள் நுழையும் லாரிகளால் விபத்து நேரிடும் அபாயம் உள்ளது.
கிராமப்புறத்தில் இந்த கூட்டு சாலையில் கனரக வாகனங்கள் வரும் என்பதற்கான எந்தவித எச்சரிக்கை பதாகையும் இல்லை. இதனால், சாலையில் வழக்கமாக வரும் வாகனங்களின் ஓட்டுனர்கள் தடுமாறுகின்றனர். மேலும், இந்த பகுதியில் சாலையின் குறுக்கே பேரிகார்டு வைத்து வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும். கனரக வாகனங்கள் திரும்பும் இந்த கூட்டு சாலையில்,
தார் சாலை சேதம் அடைந்துள்ளதும், புழுதி பறப்பதும் வாகன ஓட்டிகளை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தி வருகிறது. தார் சாலையை சீரமைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில், தண்ணீர் தெளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.