தண்ணீரின்றி கருகும் மரக்கன்றுகளை காக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
திருச்சி மாநகராட்சியில் தண்ணீரின்றி கருகும் மரக்கன்றுகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூழலியல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Update: 2024-04-24 09:41 GMT
திருச்சியில் அடா்வன காடுகள் வளா்ப்புத் திட்டம், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மாநகரப் பகுதிகளில் ஏராளமான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள மாணவா் சாலை, கன்டோன்மென்ட் பகுதியில் அனைத்து சாலைகள், காஜாமலை அண்ணா விளையாட்டரங்கை சுற்றியுள்ள சாலை, புதுக்கோட்டை நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடப்பட்ட மரக்கன்றுகள் நன்கு வளா்ந்த நிலையில் உள்ளன. தற்போது, கோடை காலத்தையொட்டி தண்ணீா் தட்டுப்பாடு நிலவுவதால் மரக்கன்றுகளுக்கு தண்ணீா் பாய்ச்சுவதில் தடையேற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியா்கள் டேங்கா்கள் மூலமாகவும், ஆங்காங்கே போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளிலிருந்தும் தண்ணீா் பாய்ச்சி வந்தனா். மக்களவைத் தோ்தல் உள்ளிட்ட பரபரப்பான சூழல்களால் மாநகராட்சி ஊழியா்களால் தொடா்ந்து மரக்கன்றுகளுக்கு தண்ணீா் பாய்ச்ச இயலாமல் போனது. அலுவலா்களாலும் மரக்கன்றுகள் விஷயத்தில் ஆா்வம் காட்ட இயலவில்லை. இந்நிலையில் கடந்த சில நாள்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக காணப்படும் கடும் வெப்பத்தால், மரக்கன்றுகள் ஆங்காங்கே கருகத்தொடங்கியுள்ளன. மரக்கன்றுகள் முற்றிலும் காய்ந்து கருகும் முன்பு அவற்றை காக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.