கொட்டகையில் பதுங்கி இருந்த 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
கொட்டகையில் பதுங்கி இருந்த 8 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே குந்துகோட்டை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி அருகே அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி முனி கௌடா என்பவருக்கு சொந்தமான கால்நடை வளர்க்கும் கொட்டகை உள்ளது. இந்த கொட்டகையில் விவசாயி முனி கௌடா மாடு ஒன்றை கட்டியிருந்தார்.
இன்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மலைப்பாம்பு ஒன்று அந்த கொட்டகைகுள் புகுந்து பதுங்கி கிடந்துள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அஞ்செட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் கிராம மக்களின் உதவியுடன் மலைப்பாம்பை இலாவகமாக பிடித்தனர்.
பிடிபட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளமுள்ளதாக இருந்துள்ளது. பின்னர் அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் அஞ்செட்டி வனப்பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவித்தனர். இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.