மாநகராட்சியுடன் இணைக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் இணைக்க கிராசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதி மழை வெள்ளத்தில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்க்கு தடையாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்து பகுதியை மாநகராட்சியுடன் இணைக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென ஒரு தரப்பினர் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் மாநகராட்சி உடன் இணைத்தால் இலவச பட்டா வழங்க முடியாது தீர்மான நிறைவேற்றக்கூடாது என்றனர். இதைத்தொடர்ந்து இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கிவிட்டு மாநகராட்சி உடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.