சேலத்தில் சாலையோரம் மயங்கி கிடந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் சாவு
கோவையை சேர்ந்த ஓய்வுபெற்றவங்கி ஊழியர் சேலத்தில் சாலையோரம் மயங்கி சாவு.
Update: 2024-03-14 02:35 GMT
கோவை கே.கே.புதூரை சேர்ந்தவர் புன்னைக்கல் ஜார்ஜ் ஜெபாஸ்டின் (வயது 80). பொதுத்துறை வங்கியில் பணியாற்றி கடந்த 2001-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் அதன் பிறகு வீடு திரும்ப வில்லை. இது குறித்து அவரது மனைவி எலிசபெத் கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை தேடி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மெய்யனூர் பகுதியில் மயங்கிய நிலையில் அடையாளம் தெரியாத முதியவர் கிடப்பதாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் முதியவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது கோவையில் காணாமல் போன புன்னைக்கல் ஜார்ஜ் ஜெபாஸ்டின் என்பது தெரிந்தது. இதையடுத்து முதியவர் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உடலை, அவரது மனைவி எலிசபெத்திடம் போலீசார் ஒப்படைத்தனர்.