ஓய்வு பெற்ற அரசு மருத்துவருக்கு மூன்று ஆண்டு சிறை
மேட்டூரில் சட்டத்திற்கு புறம்பான வகையில் ஸ்கேன் சென்டர் நடத்தி வந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து மேட்டூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேட்டூர்: மேட்டூர் அரசு மருத்துவமனை அருகே ஒரு தனியார் மருத்துவமனை இயங்கி வந்தது. இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களை ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிப்பதாகவும், பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதாகவும் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊரக நலப்பணிகள் டி.எஸ்.பி. தாமஸ்பிரபாகரன், முதுநிலை எக்ஸ்ரே மருத்துவர் நடராஜன் மற்றும் குழுவினர் அந்த மருத்துவ மனையில் சோதனை செய்தனர்.
அப்போது ஸ்கேன் செய்த கர்ப்பிணி பெண்களின் பட்டியல் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாமலும், தனி தாளிலும் எழுதி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஸ்கேன் செய்த படங்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர். இது தொடர்பான வழக்கு மேட்டூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தன. நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதில் மருத்துவமனை நடத்தி வந்த ஓய்வு பெற்ற மருத்துவர் சுதாவிற்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்துபரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.