அதிகரிக்கும் வெப்பம் - எச்சரிக்கையாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
கரூரில் வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசியமின்றி மதிய வேளைகளில் வெளியே செல்வதை தவிர்க்குமாறு ஆட்சியர் தங்கவேல் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக முழுவதும் சமீப காலமாக அதிகப்படியான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், குழந்தைகளும், வயதில் மூத்தவர்களும், தொடர் சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஏப்ரல் 23 நேற்றும் ஏப்ரல் 24 இன்றும் கரூர் மாவட்டத்தில் அதிகப்படியான வெப்ப அலை வீசும் என தெரிவித்துள்ளார்.
இதனால், பொதுமக்கள் உச்சி வெயில் நேரமான மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில், பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் எனவும், வெயில் தாக்கத்தினால் உடல் நலக்குறைவு ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுமாறும் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.