விவசாய நிலங்களுக்கு பாதை கோரி சாலை மறியல் முயற்சி
குடிகாடு கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு பாதை கேட்டும், மலட்டேரி நீர் வரத்துக்கு வழி ஏற்படுத்தித் தரக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலணிக்குழி குடிகாடு கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் வடக்கு வேலி ஓடையில் இருந்து மலட்டு ஏரி வரை தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை அப்புறப்படுத்தி விட்டதாகவும், இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குச் செல்ல பாதிப்பு ஏற்படும் எனவும் எனவே ஐந்து மீட்டர் பரப்பளவில் ஏற்கனவே உள்ளது போன்று பாதை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதேபோன்று மலட்டு ஏரி கரை பலப்படுத்தப்படும் பணிகளின் போது, கரையிலிருந்து எடுக்கப்பட்ட மண், குடியிருப்பு பகுதிகளில் மேலே நிரப்பி மழைநீர் செல்ல முடியாதபடி மண்ணை அணைகட்டி வைத்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் மழைநீரானது குடியிருப்பு பகுதிகள் புகுவதுடன் தேங்கி பாதிப்பு ஏற்படும் என்றும், எனவே மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்திவிட்டு அதன் பிறகு கரைகளை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர். பலமுறை பொதுமக்கள் வைத்த இந்த இரு கோரிக்கைகளையும் நிறைவேற்றாததால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் போராட்டம் நடத்தப் போவதாக அண்மையில் அறிவித்தனர்.
அறிவித்தபடி மேலணிக்குழி- காட்டுமன்னார்கோயில் செல்லும் சாலையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மறியலில் ஈடுபட ஆயத்த நிலையில் இருந்தனர். அப்போது மீன்சுருட்டி போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகள் மற்றும் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களிடத்தில் இன்னும் ஒரிரு தினங்கள் கால அவகாசம் கொடுங்கள் என்றும் அதற்குள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அங்கு கூடியிருந்த பகுதி பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் இது குறித்து அப்பாக்குதி கிராம பெண்கள் தெரிவிக்கையில்: பொதுமக்கள் ஆகிய நாங்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். வடக்கு வேலி ஓடையில் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும், போலீசார் பேச்சுவார்த்தையில் இரண்டு தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கால அவகாசம் கேட்டுள்ளனர். அதன்படி நாங்கள் கலைந்து செல்கின்றோம். எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த தயங்கமாட்டோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்து சென்றனர் இச்சம்பவம் காரணமாக குடிகாடு பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.