பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15 வரை கொண்டாடப்படும் நிலையில் ஓட்டுநர்கள், பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு (15-1-2024 - 14-2-2024) ஒரு மாத காலத்திற்கு பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
அதன்படி நாமக்கல் பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் நாமக்கல் வடக்கு (TN-28) தெற்கு (TN-88) திருச்செங்கோடு (TN-34) மற்றும் குமாரபாளையம் சார்பாக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் (வடக்கு) இ.எஸ்.முருகேசன் அவர்கள் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், சிவக்குமார், சரவணன்,நித்யா மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் புதுச்சத்திரம் ஷாஜகான், உதவி ஆய்வாளர் நேரு , ரெட் கிராஸ் செயலர் சி.ஆர்.இராஜேஸ் கண்ணன் போக்குவரத்து கழக கிளை மேலாளர் மகேஷ் மற்றும் போக்குவரத்து கழக ஊழியர்கள் போக்குவரத்து துறை அலுவலர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.