மணபாறை அருகே சாலையை சீரமைத்து தரக்கோரி சாலைமறியல்
மணப்பாறை அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்பாளையத்தான்பட்டியில் இருந்து புதுப்பட்டி வழியாக மலையடிப்பட்டி செல்லும் சாலை உள்ளது. இந்த பிரதான சாலையின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
ஆனால் இந்த சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் இச்சாலையை புதிய தார் சாலையாக அமைத்திட வேண்டும் என்று மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக , வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மணப்பாறை – மதுரை பிரதான சாலையில் கல்பாளையத்தான்பட்டி என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தங்களுக்கு புதிய சாலை அமைப்பது குறித்து உரிய உத்தரவாதம் அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று கூறி மக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளிராமசாமி பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பழுதடைந்த சாலையை புதிதாக அமைக்கும் பணிக்கு அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் நிதி ஒதுக்கீடு வந்த பின் பணிகள் நடைபெறும் என்று கூறினார்.
இதனையடுத்து சமாதானமடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக மணப்பாறை - மதுரை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.