அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி
சேலம் பள்ளபட்டியில் சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஈரோடு வாலிபரிடம் ரூ.12 லட்சம் வாங்கி மோசடி செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Update: 2024-01-11 15:29 GMT
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார்(26). இவர் அரசு வேலை தேடி வந்தார். இந்த நிலையில் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே போர்வெல் அலுவலகம் நடத்தி வரும் தங்கவேல் என்பவரை தொடர்பு கொண்டார். அப்போது சார் பதிவாளர் அலுவலகத்தில் கிளர்க்கு வேலை இருப்பதாகவும் அதற்கு பணம் கொடுத்தால் வாங்கி தருவதாகவும் தங்கவேல் கூறினார். இதனை நம்பிய முத்துக்குமார் முன்பணமாக ரூ.12 லட்சம் கொடுத்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் தங்கவேல் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இது குறித்து கேட்டபோது தங்கவேல் சரியான பதில் சொல்லாமல் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி தங்கவேல், அவரது மனைவி பாக்கியம் மற்றும் ரமேஷ், அவரது மனைவி கோமதி ஆகிய 4 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவர்களை தேடினர். அப்போது அவர்கள் 4 பேரும் தலைமறைவானது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.