கல்லூரி பேராசிரியரிடம் ரூ.27.75 லட்சம் மோசடி - சைபர் கிரைம் விசாரணை
இணையதளம் வாயிலாக முதலீடு செய்தால் கமிஷன் பெறலாம் என கூறி கல்லூரி பேராசிரியரிடம் ரூ.27.75 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Update: 2023-12-24 08:34 GMT
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது செல்போன் டெலிகிராமுக்கு கடந்த மாதம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. இதில் சில பொருட்கள் மீது முதலீடு செய்தால் கமிஷன் கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் அந்த பேராசிரியர் பொருட்களில் முதலீடு செய்து சிறிது கமிஷன் தொகையை சம்பாதித்தார். இதையடுத்து அவருக்கு மர்ம நபர் ஒரு இணையதள லிங்கை அனுப்பி அதில் முதலீடு செய்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என்று கூறினார். இதை நம்பி பேராசிரியர் பல்வேறு தவணைகளாக மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு ரூ.28 லட்சத்து 29 ஆயிரம் முதலீடு செய்தார். இதற்காக அவருக்கு ரூ.50 ஆயிரத்து 100 மட்டுமே கமிஷனாக வழங்கப்பட்டது. அதன் பிறகு அவருக்கு கமிஷன் தொகை ஏதும் வழங்கவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கல்லூரி பேராசிரியர் இந்த மோசடி குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைலாசம் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மர்ம நபர் பல்வேறு வங்கி கணக்குகளை அனுப்பி கல்லூரி பேராசிரியரிடம் ரூ.27.75 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் அந்த பணத்தை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.