அஞ்சலகங்களில் இன்று முதல் தங்கப் பத்திரங்கள் விற்பனை
திருச்சி அஞ்சல் கோட்ட அஞ்சலகங்களில் இன்று முதல் வரும் 16ம் தேதி வரை தங்கப் பத்திரங்கள் விற்கப்பட உள்ளன.
திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி அஞ்சல் கோட்டத்தில் உள்ள திருச்சி, லால்குடி தலைமை அஞ்சலகம் உள்பட 99 துணை அஞ்சலங்களில் தங்கப் பத்திரங்கள் விற்கப்படுகின்றன. இத்திட்டத்தில் ஒருவா் 1 கிராம் முதல் 4 கிலோ வரை தங்கம் வாங்கலாம். முதலீடு காலம் 8 ஆண்டுகள் ஆகும். 8 ஆண்டு இறுதியில் அன்றைய தேதி மதிப்பில் தங்கப் பத்திரம் பணமாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு தங்கப் பத்திரத்தை முன் முதிா்வும் செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீடுகளுக்கு மத்திய ரிசா்வ் வங்கியின் மூலம் 2.5 சதவீதம் கணக்கிடப்படும் வட்டி, ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறையும் முதலீட்டாளா்களின் கணக்கில் சோ்க்கப்படும். இது தங்கப் பத்திர முதலீட்டாளா்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் ஆகும். திங்கள்கிழமை முதல் வரும் 16 ஆம் தேதி வரை தங்கப் பத்திரங்களை வாங்கலாம். ஒரு கிராம் ரூ. 6,263 ஆகும். திருச்சி கோட்டத்திலுள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் முதலீடு செய்யலாம். இதற்கு பான், ஆதாா் அட்சை, அஞ்சலக சேமிப்பு கணக்குப் புத்தகம் அல்லது வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக முதல் பக்க நகல். ( சரிபாா்ப்புக்கு அசல்) ஆகிய ஆவணங்கள் தேவை. தங்கத்தைப் பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் தங்க மதிப்புக்கு சேமித்துப் பொதுமக்கள் பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.