இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் குறித்து எடப்பாடியில் திமுக பிரச்சாரம்
திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்து கூறி திமுக நிர்வாகிகள் பிரச்சாரம்
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எடப்பாடி தொகுதியில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் எனும் தி.மு.க பிரச்சார நிகழ்ச்சியினை சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் டி.எம் செல்வகணபதி தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட, கவுண்டம்பட்டி நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் நடைபெற்ற இல்லம் தோறும் ஸ்டாலின் குரல், தி.மு.க பிரச்சார துவக்க விழா நிகழ்ச்சிக்கு, நகர மன்ற தலைவர் டி.எஸ்.எம் பாஷா முன்னிலை வகித்தார். மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் பரணி மணி வரவேற்று பேசினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தி.மு.க சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம் செல்வகணபதி, இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சார நிகழ்ச்சியினை தொடக்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பெண்களுக்கான இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத் தொகை, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை, விவசாய கடன் தள்ளுபடி, மாணவர்களுக்கான காலை உணவு திட்டம், விவசாயி மற்றும் நெசவாளர்களுக்கு விலை இல்லா மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்றவர் அங்குள்ள பொது மக்களை சந்தித்து தி.மு.க அரசின்சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கொங்கணாபுரம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் எடப்பாடி ஒன்றிய செயலாளர் நல்லதம்பி மற்றும் திரளான தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.