சேலம் : குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

சேலம் களரம்பட்டியில் குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-25 03:56 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 

சேலம் மாநகராட்சி 57-வது வார்டுக்குட்பட்ட களரம்பட்டி ஆட்டோ நிறுத்தம் பகுதியில் உள்ள 3 வீதிகளுக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் களரம்பட்டி ஆட்டோ நிறுத்தம் பகுதிக்கு வந்து குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் வார்டு கவுன்சிலர் சீனிவாசனும் அங்கு வந்தார். அப்போது அவர் குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாயில் மின்வாரிய பணியின்போது உடைப்பு ஏற்பட்டதாகவும், அதனை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. எனவே உடைப்பு சரி செய்து விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் தற்காலிக நடவடிக்கையாக லாரியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News