சேலம் : 4 டாஸ்மாக் பார்களுக்கு சீல்
சேலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 4 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் குறிப்பிட்ட சில கடைகளில் மட்டும் அரசு அனுமதியுடன் பார் (மதுக்கூடம்) வசதி உள்ளது. இந்த பார்களை ஏலம் எடுத்தவர்கள் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். ஆனால் மாவட்டத்தில் சில இடங்களில் அரசு அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருவதாகவும் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தனஞ்செயன் தலைமையில் தாசில்தார் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று ஆத்தூர், வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பார்களில் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது, காட்டுக்கோட்டை, நரசிங்கபுரம், ஏத்தாப்பூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வந்ததும், இதன்மூலம் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த 4 பார்களையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அரசுக்கு மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகையை தவறாமல் செலுத்தினால் மட்டுமே மீண்டும் பார்கள் செயல்பட அனுமதி வழங்கப்படும் என அதன் உரிமையாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் சில இடங்களில் அனுமதி இல்லாமல் பார்கள் செயல்படுவது தெரியவந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.