சேலம் செவ்வாய்பேட்டையில் கோவில் உண்டியல் பணம் திருட்டு
சேலம் செவ்வாய்பேட்டையில் கோவில் உண்டியல் பணம் திருட்டு. கோவில் ஊழியர்கள் மீது வழக்கு.
Update: 2024-03-28 04:43 GMT
சேலம் செவ்வாய்பேட்டையில் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் அவ்வப்போது உண்டியல் திறக்கப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி கோவிலில் இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டன. அப்போது, பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்ட கோவில் தரிசன டிக்கெட் விற்பனை செய்த ஊழியர்கள் 2 பேர் இரண்டு கட்டுகள் பணத்தை எடுத்து கொண்டது தெரியவந்தது. இந்த காட்சி கோவில் வளாகத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே, ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவில் செயல் அலுவலர் கலைச்செல்வி நேற்று செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். மேலும், அவர்கள் பணத்தை திருடி பதுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவையும் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. அதன்பேரில், கோவில் ஊழியர்கள் செல்லமுத்து, ஜெயசூரியா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உண்டியல் எண்ணும்போது 2 கட்டு பணம் எடுத்தது 500 ரூபாய் நோட்டுகளா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.