சேலம் : கோவில்களில் சிறப்பு பூஜை, அலங்காரம்
சேலத்தில் புத்தாண்டையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜகணபதி கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ராஜகணபதிக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து ராஜ கணபதிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு குருக்கள் வேதங்கள் முழங்க லட்சார்ச்சனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோட்டை மாரியம்மன் முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க அர்ச்சனைகள் நடைபெற்றன. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோட்டை மாரியம்மனை தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.