வடசந்தையூரில் ஆடுகள் விற்பனை மந்தம்
வடசந்தையூர் வார சந்தையில் வறட்சி மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் ஆடுகள் விற்பனை மந்தம்.
Update: 2024-04-05 02:25 GMT
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி அடுத்த வடசந்தையூரில் நேற்று வாரச்சந்தை கூடியது. கடும் வெயில் காரணமாக ஏரி, குளம், குட்டை என நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி விட்டது. இதனால் ஏற்பட்டுள்ள தீவன தட்டுப்பாடு காரணமாக, விவசாயிகள் கால்நடை களை விற்பனை செய்து வருகின்றனர். வியாழக் கிழமையான நேற்று, வட சந்தையூரில் கூடிய ஆட்டு சந்தைக்கு அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. இறைச்சிக்கான ஆடுகளே அதிகம் விற்பனையானது. வளர்ப்பு குட்டி, ஆடுகள் சரிவர விற்பனையாகவில்லை. வியாபாரிகள் வறட்சியை காரணம் காட்டி ஆடுகளின் விலையை குறைத்தனர். தேர்தல் நடத்தை விதிமுறையால் பணப்பரிவர்த்தனை தடைபட்டதால், சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமாக காணப்பட்டது. சந்தையில் 10 மற்றும் 20 கிலோ எடையுள்ள ஆடுகள் 7,500 முதல் 15 ஆயிரம் வரை விற்பனையானது. விற்ப னையாகாத ஆடுகளை விவசாயிகள் திரும்ப ஓட்டிச் சென்றனர். சந்தையில் 22 லட்சம் அளவிற்கு மட்டுமே விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வறட்சியை சமாளிக்க, அரசு மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.