சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த் திருவிழா வருகின்ற 7 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். சமயபுரம் மாரியம்மன் மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், பக்தர்களை நோய்,நொடிகள், தீவினைகள் அணுகாது சகல சவுபாக்கியங்களும் கிடைக்க வேண்டியும் ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும்.
இத்தகைய பச்சை பட்டினி விரதம்பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல்,காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்பாலித்தல் ஆகிய 5 தொழில்களையும் செய்து, சித்திரை பெருவிழா நாட்களில் அம்மன் அருள்புரிந்து வருவதாக ஐதீகம். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா வருகின்ற 7 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனையொட்டி அன்று காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்மன் சிறப்பு கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன்பு எழுந்தருளுகிறார். அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இதைத்தொடர்ந்து திரு விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார்.
அதேபோல் தினமும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை,சேஷம், மரக்குதிரை வாகனம் என ஒவ் வொரு வாகனத்தில் எழுந்த கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். வருகின்ற 15 ம் தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற 16 ந்தேதி செவ்வாய்க்கி காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுன லக்கனத்தில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.