சாமி தரிசனம் செய்து பரப்புரையை துவங்கிய காங்கிரஸ் வேட்பாளர்
விருதுநகரில் சாமி தரிசனம் செய்து தேர்தல் பரப்புரையை காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் துவக்கினார்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 4-வது முறையாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட LBS நகரில் தனது முதலாவது பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.இதனை தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.
விருதுநகரில் முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் குடும்பத் தலைவிக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார்.
டெல்லியில் உங்களுக்காக வேலை பார்ப்பதற்காக மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கேட்டு உங்களிடம் வந்துள்ளேன். டெல்லியில் இருந்து கிடைக்கும் பெட்ரோல் டீசல் கேஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு விலை என்பதை யோசித்துப் பாருங்கள். அன்றைய விலையை விட தற்போது பன்மடங்காக உயர்ந்துள்ளது.
விலை உயர்வுக்கு காரணமான மோடி ஆட்சி மீண்டும் வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யுங்கள். வேண்டும் என தேர்வு செய்தீர்கள் என்றால் அடுத்த ஐந்தாண்டுகளில் சிலிண்டர் விலை 2000 ரூபாயாகவும் பெட்ரோல் டீசல் விலை இன்னும் பன்மடங்கும் உயர வாய்ப்புள்ளது.நேற்று வரை தாமரையும் முரசும் ஒன்றாகத்தான் இருந்தார்கள். மோடி எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிப்பதற்காகவே அதிமுக பாஜக பிரிந்து இருப்பதாக தெரிவித்தார்.
பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்னதாக காளியம்மன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு தேர்தல் பரப்புரையை தொடங்கினார். முன்னதாக மேளதாளங்கள் முழங்க காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.