பேராவூரணியில் பாலத்தின் அடியில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரச் சீர்கேடு
பேராவூரணி -அறந்தாங்கி சாலையில் பாலத்தின் அடியில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நகரில், அறந்தாங்கி சாலையில் நீலகண்டப் பிள்ளையார் கோயில் பின்புறம் டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளி அருகே உள்ள பாலத்தில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனடியாக பாலத்தை தூய்மைப்படுத்தி, தண்ணீர் செல்லும் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
பேராவூரணி - அறந்தாங்கி சாலையில் குமரப்பா பள்ளி அருகே பழமையான பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் சென்று வருகின்றனர்.
இந்த பாலத்திற்கு பெரியகுளம் ஏரி நிரம்பி, வெளியேறி வரும் உபரிநீர் வந்து, நூறு அடி தூரத்தில் உள்ள ரயில்வே பாலத்தினை கடந்து, கழனிவாசல் ஏரியை சென்றடையும்.
இதன் மூலமாக பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பட்டு வந்தது. மேலும், கழனிவாசல் குளத்திற்கு நீர் சென்றடைய பிரதான வழியாகவும், அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரவும் காரணமாக இருந்து வந்தது. பாலத்தின் வழியாக செல்லும் நீரில் ரயில்வே பாலத்தில் மக்கள் குளிப்பதற்கும், கால்நடைகள் தண்ணீர் அருந்தும் இடமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பாலம் பராமரிப்பு இல்லாமல் எங்கங்கோ எடுக்கின்ற கழிவு நீரை இரவு நேரங்களில், பாலத்தின் கீழ் விடப்படுவதாலும், பாலத்திற்கு கீழ் புதர்களும், கோரைகளும் நிறைந்து தண்ணீர் தேங்கி கிடப்பதால் மிகுந்த துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது.
இதுகுறித்து குறிஞ்சி இன மக்கள் எழுச்சி கழக தலைவர் வழக்குரைஞர் உத்தமகுமரன் கூறியது, முக்கிய போக்குவரத்து நிறைந்த பகுதியாகவும், பிள்ளையார் கோயில், அருகில் உள்ள பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் நிலையில் பாலம் பராமரிக்கப்படாமல் கழிவு நீர் வாய்க்காலாக மாறியுள்ளது. கழிவுநீரை கொண்டுவந்து பாலத்தில் விடுபவர்கள் மீது சுகாதார துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
பொதுப்பணித்துறையினர் பாலத்தை தூய்மைப்படுத்தி, தண்ணீர் செல்லும் வாய்க்காலை தூர்வார மழை காலத்திற்கு முன்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்" என்றார் .