திருக்காலிமேடு பகுதியை புறக்கணிக்கும் துாய்மை பணியாளர்கள்

திருக்காலிமேடு பகுதியில் துாய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்காததால் அப்பகுதியில் குப்பைகள் குவிந்துள்ளது.

Update: 2024-01-11 15:48 GMT

குப்பை குவியல் 

காஞ்சிபுரம் மாநகராட்சி, 51 வார்டுகளில் உள்ள வீடு மற்றும் கடைகளில் இருந்து சேகரமாகும் குப்பையை கொட்ட, பொது இடங்களில் வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டி, 2022ல் அகற்றப்பட்டு, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் வாயிலாக தினமும் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு, பாலாஜி நகரில், ஒரு வாரம், 10- - 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே துாய்மை பணியாளர்கள் குப்பை சேகரித்து வந்தனர். இந்நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாக பாலாஜி நகருக்கு குப்பை சேகரிக்க துாய்மை பணியாளர்கள் வருவதில்லை என, புகார் எழுந்துள்ளது.

இதனால், அப்பகுதியினர் சிந்தாமணி விநாயகர் கோவில் மற்றும் மின்மாற்றி அருகில் குப்பையை கொட்டுகின்றனர். நாள் கணக்கில் அகற்றப்படாத குப்பையால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதிக்கு என நியமிக்கப்பட்டுள்ள துாய்மை பணியாளர்கள், பாலாஜி நகர் நுழைவு பகுதியான, சவுராஷ்டிரா தெருவில் வசிப்போரிடம் குப்பை சேகரித்ததாக, கையெழுத்து வாங்கிவிட்டு திரும்பி விடுகின்றனர். தீபாவளி பண்டிகைக்குபின், ஒரே ஒரு முறை மட்டுமே குப்பை சேகரிக்க வந்தனர். இதனால், இத்தெருக்களில் குப்பை குவியலாக உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, துாய்மை பணியாளர் தினமும் குப்பை சேகரிக்க வர வேண்டும் என, திருக்காலிமேடு பாலாஜி நகர் பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News