6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பணிக்கு திரும்பிய தூய்மை பணியாளர்கள்

ஆத்தூர் நகராட்சியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பணிக்கு திரும்பினர்.

Update: 2024-06-25 03:45 GMT

ஆத்தூர் நகராட்சியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பணிக்கு திரும்பினர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு ஒப்பந்த தூய்மை பணியாளராக 123 பேர் பணியாற்றி வருகின்றனர். மேலும் நகராட்சியில் ஒப்பந்தத்தின் மூலம் தனியாருக்கு சொந்தமான நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வருகிறது. இந்த நிறுவனம் ஆத்தூர் நகராட்சியில் பணியாற்றும் 123 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்களுக்கு ஒரு மாத கால சம்பளம் வழங்காததும் மற்றும் 7 மாதமாக வருங்கால வைப்பு நிதி செலுத்தாததை கண்டித்து பணிக்கு வந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 123 பேரும் பணிக்கு செல்லாமல் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தையும் உடனடியாக வழங்க கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த முற்றுகை போராட்டத்தால் ஆத்தூர் நகரின் தூய்மை பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. ஆத்தூர் நகராட்சி தலைவர் நிர்மலா பபிதா, ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சம்பளம் தற்போது வழங்கப்படுவதாகவும், வருங்கால வைப்புத் தொகை விரைவில் செலுத்தப்படும் எனவும், ஒப்பந்த பணியாளர்களுக்கு தேவையான தளவாடப் பொருட்கள் வழங்கப்படும் என உறுதி அளித்தார். அதற்கு தூய்மை பணியாளர்கள், வரும் 27ம் தேதிக்குள் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.ஆறு மணி நேர போராட்டத்திற்கு பின் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், தூய்மை பணிக்கு திரும்பிச் சென்றனர்.

Tags:    

Similar News