வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம்
சங்ககிரியில் நடந்த சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நாமக்கள் மக்களவை தொகுதி உதவி தேர்தல் அலுவலரும், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியருமானலோகநாயகி தலைமை வகித்து பேசிய அவர் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 311 வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள் தற்போதிலிருந்து அவரவர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் உள்ள அடிப்படை வசதிகள், தேர்தல் ஆணையத்தின் சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விரைந்து தெரிவிக்க வேண்டும்.
மேலும் வாக்குச்சாவடி நிலைய மண்டல அலுவலர்களுக்கு உரிய முறையில் வழிகாட்ட வேண்டும் எனவும் மேலும் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 311 வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையத்தின் கணக்குகள் படி 85 வயதிற்கு மேற்பட்ட 2373 பேரும், 1887 மாற்றுத்திறனாளிகளும் வீட்டிலிருந்து வாக்களிக்க வசதியாக படிவம் 12டி ல் பூர்த்தி செய்து அதனை மார்ச் 25ம் தேதிக்குள் தேர்தல் பிரிவில் சமர்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அப்போதுசங்ககிரி வட்டாட்சியர் அறிவுடைநம்பி, சமூகநலத்துறை தனிவட்டாட்சியர் ஜெயக்குமார், தேர்தல் துணை வட்டாட்சியர் மகேந்திரன், வருவாய் ஆய்வாளர்கள், கிராமநிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் வாக்குச்சாவடி அலுவலர்கள் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.