108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு சுகப்பிரசவம்
சத்தியமங்கலம் அருகே பிரசவ வலியுடன் 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்ணுக்கு வழியிலேயே சுகப்பிரசவம் நடந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கே.என்.பாளையம் கிராமத்தில் பெண் ஒருவர் பிரசவ வலியால் துடிப்பதாக மாலை 6.58 மணிக்கு 108 ஆம்புலன்ஸ்-க்கு அழைப்பு வந்தது. உடனே சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. அங்குள்ள ஒரு வீட்டில் சுப்புலட்சுமி (வயது 23) என்ற பெண்மணி பிரசவ வலி அதிகமானதால் துடித்துக் கொண்டிருந்தார்.
உடனே சுப்புலட்சுமியை 108 ஆம்புலன்ஸ மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கூட்டி வரும் வழியில் பிரசவ வலி மிகவும் அதிகமானதால் அவசரகால மருத்துவ நுட்புனர் கார்த்திகேயன் வழியிலேயே பிரசவம் பார்த்தார். அப்போது சுப்புலட்சுமிக்கு மாலை 7.25 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவ சிகிச்சை அளித்து பாதுகாப்பாக சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு தாய்,சேய், இருவரும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர் இந்தப் பணியை சிறப்பாக செய்த அவசரகால மருத்துவ நுட்புனர் கார்த்திகேயன் மற்றும் ஓட்டுநர் ராஜ்குமார் ஆகிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு உறவினர்கள் மற்றும் கே.என்.பாளையம் பகுதி பொதுமக்கள் வாழ்த்துக்களையும் நன்றினையும், தெரிவித்தனர்.