குமரியில் துப்பாக்கிகளை ஒப்படைக்க எஸ்.பி. உத்தரவு
குமரியில் துப்பாக்கிகளை ஒப்படைக்க எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீதர் தலைமையில் நடந்து வருகிறது. எஸ்.பி. சுந்தரவதனம் தலைமையில் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் பற்றி ஆய்வு நடந்து வருகிறது. முதற்கட்டமாக ரவுடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.
இது குறித்து எஸ்.பி. சுந்தரவதனம் கூறுகையில், குமரி மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகளிடம் நன்னடத்தை சான்றிதழ் எழுதி வாங்கப்படுகிறது.
இதை மீறி செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலையொட்டி லைசென்ஸ் பெற்று துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக அந்த துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் 350 பேர் லைசென்ஸ் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இதில் பண பயன்பாடுகள் தவிர மற்ற காரணங்களுக்காக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.